< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை பள்ளிகளில் கண்காணிக்க 95 பொறுப்பு அலுவலர்கள் நியமனம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை பள்ளிகளில் கண்காணிக்க 95 பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

தினத்தந்தி
|
26 Sept 2023 1:17 AM IST

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை பள்ளிகளில் கண்காணிக்க 95 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 263 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அடுத்த மாதத்திற்கு (அக்டோபர்) தேவையான உணவு பொருட்கள் கடந்த 22-ந்தேதி அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது, மாணவ-மாணவிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சுகாதாரமான சுவையான உணவு வழங்கப்படுகிறதா? உள்ளிட்டவற்றை கண்காணிக்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 95 பொறுப்பு அலுவலர்கள், மாவட்ட கலெக்டரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொறுப்பு அலுவலருக்கும் 2 முதல் 4 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த பொறுப்பு அலுவலர்கள், உணவு பொருட்கள் அடுத்த மாதத்தில் பள்ளி வேலை நாட்களுக்கு போதுமான அளவு உள்ளதா? என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் செலவினங்களுக்காக மைய பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்