
ஈரோடு
இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
புதிய இ-சேவை மையம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் புதிதாக இ-சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சார்பில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நலமேம்பாட்டு நிறுவனம், மீன் வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் மூலமாக இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு அரசின் சேவைகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.
காத்திருக்கும் நிலை
இந்த நிலையில் இந்த சேவையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமை சார்பில் 'அனைவருக்கும் இ-சேவை மையம்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே புதிதாக இ-சேவை மையங்கள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் அரசின் திட்டங்களை பெறுவதற்கு பொதுமக்கள் இ-சேவை மையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை குறைக்கும். எனவே புதிதாக இ-சேவை மையம் தொடங்குவதற்கு ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவுசெய்ய முடியும்.
விண்ணப்ப கட்டணம்
கூடுதல் விவரங்களுக்கு www.tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.inஆகிய இணையதள முகவரியை பயன்படுத்தி பார்வையிடலாம். இதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி இரவு 8 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் தொடங்குவதற்கு ரூ.3 ஆயிரமும், நகர்ப்புறத்துக்கு ரூ.6 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகியன விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.