அரியலூர்
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
|இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள்
அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்கள் பணியிடத்திற்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராகவோ அல்லது பட்டியல் இனத்தவர்களாகவோ இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள்
இதில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் தா.பழூர்-1, மணக்கால்-2, விளந்தை-1, ஜெயங்கொண்டம்-1, த.கீழவெளி-1, இளையபெருமாள் நல்லூர்-2, வடவீக்கம்-1, வெத்தியார்வேட்டு-2, பாப்பாக்குடி-1, கங்கைகொண்ட சோழபுரம்-1, கொல்லாபுரம்-1, இளந்தைக்கூடம்-1, தூத்தூர்-1, கீழகொளத்தூர்-1, பூவாணிப்பட்டு-2 ஆகிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதேபோல் இலைக்கடம்பூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி-1, ஜெயங்கொண்டம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி-1, வடவீக்கம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி-1 என 3 தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
தகுதியான நபர்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.