< Back
மாநில செய்திகள்
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கடலூர்
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
25 Nov 2022 12:15 AM IST

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி., டி.என்.சி) வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

இலவச கல்வித்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சமர்ப்பிக்க வேண்டும்

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் முதுகலை பட்டப்படிப்பு, 3 ஆண்டு பாலிடெக்னிக், தொழிற்கல்வி போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி உதவி தொகை இணையதளம் (Scholarship portal) புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட தொடங்கியது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்க வேண்டும். புதிய இணங்களுக்கு இணையதளம் 15.12.2022 முதல் செயல்பட தொடங்கும் புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள்

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். https://www.bcmbcmw.tn.gov.in/welfschems.htm//schemes என்ற அரசு இணையதளத்தில் கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன.

மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களில் தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்