கள்ளக்குறிச்சி
இந்திய குடிமைப்பணி போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
|மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணி போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வில் சிறப்பிக்க சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை மற்றும் இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக முகவரியான உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 10 நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம்-605 401 என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரில் கட்டணமின்றி பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை 04146 259329 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.