< Back
மாநில செய்திகள்
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
11 Aug 2023 3:07 PM IST

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இலவச தையல் எந்திரங்கள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படுத்தப்படும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கும் பொருட்டு 2023-24-ம் நிதியாண்டுக்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வயது வரம்பு விண்ணப்ப நாளன்று 20 முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

ரூ.72 ஆயிரத்துக்குள்

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருத்தல் வேண்டும், அரசு பதிவு பெற்ற தையல் பயிற்சி நிறுவனத்தில் குறைந்தது 6 மாத காலம் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் எனில் அதற்கென தாசில்தார் மூலம் வழங்கப்படும் உரிய சான்று இணைக்கப்பட வேண்டும், மேலும் கல்வி சான்று, மாற்று சான்றிதழ், ரேஷன்கார்டு, ஜாதிச்சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றுடன் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் பெண்கள் இதற்கு முன்னர் மேற்படி திட்டத்தின் கீழ் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. மேற்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தபின் அதன் நகல் ஒன்றினை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்