< Back
மாநில செய்திகள்
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
9 Oct 2022 3:24 PM IST

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

10-ம் வகுப்பு (தோல்வி), 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நிலையில் 5 ஆண்டுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

விண்ணப்பங்கள் வரவேற்பு

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.9.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

கடைசி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்குள் அனைத்து அலுவலக வேலைநாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அனைத்து அசல் கல்விசான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்