தஞ்சாவூர்
7.11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம், டோக்கன் வினியோகிக்கும் பணி
|7.11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம், டோக்கன் வினியோகிக்கும் பணி
தஞ்சை மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 பெற 7.11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது. ரேஷன்கடை பணியாளர்கள் காலை, மாலை என இருவேளை வீடு தேடிச்சென்று இதனை வழங்கினர்.
கலைஞர் உரிமைத்தொகை
தமிழகத்தில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வழங்கும் பணிநேற்று முதல் தொடங்கியது.
இந்த விண்ணப்பங்கள் 2 கட்டமாக வழங்கப்படுகிறது. அதன்படி முதல்கட்டமாக வருகிற 23-ந்தேதி வரையும், 2-வது கட்டமாக வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரையும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வந்து வழங்கப்படுகிறது.
7.11 லட்சம் குடும்ப அட்டைகள்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 1,183 ரேஷன்கடைகளில் 7 லட்சத்து 11 ஆயிரத்து 770 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கப்படுகிறது. அதன்படி முதல் கட்டமாக 850 ரேஷன்கடைகளில் உள்ள 3 லட்சத்து 72 ஆயிரத்து 506 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2-வது கட்டமாக 333 ரேஷன்கடைகளில் உள்ள 3 லட்சத்து 39 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ரேஷன்கடை பகுதியிலும் முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கப்பட்டன. இதனை ரேஷன்கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர். ஒருரேஷன்கடையில் 750 கார்டுகள் இருந்தால் காலையில் 45 டோக்கன்களும், மாலையில் 45 டோக்கன்களும் வழங்கப்பட்டது. கார்டுகள் அதிகமாக இருந்தால் டோக்கன்களும் அதற்கு ஏற்ப வழங்கப்பட்டன.
விண்ணப்பிக்க வேண்டும்
டோக்கனில் குறிப்பிட்டபடி விண்ணப்பதாரர்கள் ரேஷன்கடை பகுதியில் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார்அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ்புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இந்த முகாம்கள் தினமும் காலை 9.30 மணிமுதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு பலகை ரேஷன்கடைகளிலும் வைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.