< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம், டோக்கன் வினியோகம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம், டோக்கன் வினியோகம்

தினத்தந்தி
|
21 July 2023 12:30 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது.


தமிழக அரசு கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்க இருக்கிறது. இந்த திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு வருகிற 24-ந்தேதி முதல் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி ரேஷன்கடைகள் மூலம் விண்ணப்பம், டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை முதல்கட்டமாகவும், அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 2-வது கட்டமாகவும் முகாம் நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்டமாக 609 இடங்களிலும், 2-வது கட்டமாக 548 இடங்களிலும் முகாம் நடைபெற இருக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,157 ரேஷன்கடைகள் மூலம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 171 ரேஷன்கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம், டோக்கன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பம், டோக்கன்

இதற்கிடையே நேற்று உரிமைத்தொகை திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம், முகாமில் பங்கேற்பதற்கு உரிய டோக்கன் ஆகியவை வழங்கும் பணி தொடங்கியது. இதையொட்டி ரேஷன்கடை ஊழியர்கள் ஒவ்வொரு பகுதியாக வீடு, வீடாக சென்று விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை வழங்கினர்.

இதில் விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட ரேஷன்கார்டின் எண் எழுதி வழங்கப்பட்டது. இதனால் ஒருவரின் விண்ணப்பத்தை மற்றொரு நபர் பயன்படுத்த முடியாது. அதேபோல் டோக்கனில் முகாம் நடைபெறும் நாள், தேதி, ரேஷன்கார்டு எண், உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற தேவையான தகுதிகள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தன. மேலும் விண்ணப்பம், டோக்கன் வாங்கியவரிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இந்த நிலையில் தங்கள் பகுதியில் விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை வீடு, வீடாக கொண்டு வருவதை அறிந்த மக்கள் ரேஷன்கடை ஊழியர்களை நேரில் சந்தித்து வாங்கி சென்றனர். இதனால் ஒருசில பகுதிகளில் ஒரு தெருவுக்கு ஒரே இடத்தில் விண்ணப்பம், டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் சில பகுதிகளில் காலை 9 மணிக்கே பொதுமக்கள் ரேஷன்கடைக்கு திரண்டு சென்று விண்ணப்பம், டோக்கன் கேட்டு வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்