புதுக்கோட்டை
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் புதுக்கோட்டை வந்தன
|கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் புதுக்கோட்டை வந்தன. தாசில்தார் அலுவலகங்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை
தமிழக அரசு மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கான தகுதிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க தகுதியில்லாத நபர்களுக்கான நெறிமுறைகளும் தெரிவிக்கப்பட்டன.
இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வீடு, வீடாக வினியோகிக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மூலம் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்கப்படும். வருகிற 20-ந் தேதி முதல் விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு முகாம்களும் நடத்தப்பட உள்ளது.
விண்ணப்ப படிவங்கள்
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் தயாராகி அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வகையில் புதுக்கோட்டைக்கு விண்ணப்ப படிவங்கள், டோக்கன்கள் வந்தன. இவை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. தாசில்தார் அலுவலகங்களில் இருந்து அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இதனை கணக்கிட்டு கூடுதலாக ஒதுக்கீடு விண்ணப்ப படிவங்களை சேர்த்து சுமார் 4 லட்சத்து 96 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் வந்துள்ளன. மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. இதில் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் அரசு அறிவித்த தேதியில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பணிகள் தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது'' என்றனர்.