புதுக்கோட்டை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 2-ம் கட்டமாக விண்ணப்பம், டோக்கன் இன்று முதல் வினியோகம்
|கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 2-ம் கட்டமாக விண்ணப்பம், டோக்கன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகிக்கப்படுகிறது.
விண்ணப்ப பதிவு முகாம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 7 தாலுகாவில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
தொடர்ந்து விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 414 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
2-ம் கட்டமாக...
இதற்கிடையில் 2-ம் கட்டமாக திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய 5 தாலுகாவில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகிக்கப்படுகிறது. மொத்தம் 413 ரேஷன் கடைகளை சேர்ந்த 1 லட்சத்து 85 ஆயிரத்து 544 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம், டோக்கன் வினியோகிக்கப்பட உள்ளன.
தொடர்ந்து விண்ணப்ப பதிவு முகாம்கள் 535 இடங்களில் வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.