< Back
மாநில செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தகுதி உடையவர்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தகுதி உடையவர்கள்

தினத்தந்தி
|
16 Jun 2022 5:26 PM GMT

தமிழ் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால்தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தகுதி உடையோர் ஆவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்தார்.

சிவகங்கை,

தமிழ் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால்தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தகுதி உடையோர் ஆவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர்

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வுகள் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வு எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 4,160 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வு எழுதுவதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பில் இருப்பார். மேலும் 20 பேருக்கு ஒரு போலீஸ்காரர் கண்காணிப்பாளராக இருப்பார். 5 போலீஸ் காரர்களுக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மேற்பார்வையாளராக இருப்பார். இது தவிர பாதுகாப்பு போலீசார் நியமிக்கப்படு வார்கள். தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டும் கொண்டு வரவேண்டும். எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆன கால்குலேட்டர், ப்ளூடூத், மற்றும் வாட்ச் ஆகியவை கொண்டு வரக்கூடாது.

அனுமதி கிடையாது

தேர்வு நடைபெறும் இடத்திற்கு 8.30 மணிக்கு வர வேண்டும். 9.50 மணிக்கு மேல் யாருக்கும் தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். ஹால் டிக்கெட்டில் தவறுகள் ஏதும் இருந்தால் பதட்டப்படாமல் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தபோது கொடுத்த புகைப்படத்துடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் போதும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் வழக்கமாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு பொது அறிவு தேர்வுக்கு 70 மதிப்பெண்ணும், உடல் தகுதி தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

தமிழ் தகுதி தேர்வு

இந்த முறை புதிதாக இந்த மதிப்பெண் தவிர தமிழ் தகுதித் தேர்வு தனியாக நடத்தப்படும்.இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்துகொள்ள தகுதி உடையோர் ஆவார்கள். இதன்படி 25-ந்் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுஅறிவுத் தேர்வும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெறும்.

மேலும் தேர்வில் கலந்து கொள்பவர்கள் தேர்வு முடிந்த பின்னர் அறிவிப்பு வரும் வரை தேர்வாளர்கள் தேர்வு நடைபெறும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது. எனவே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழ் தகுதி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்