< Back
மாநில செய்திகள்
வாடகை பாக்கி தொடர்பாக மெட்ராஸ் ரேஸ் கிளப் மேல்முறையீடு; அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

வாடகை பாக்கி தொடர்பாக மெட்ராஸ் ரேஸ் கிளப் மேல்முறையீடு; அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
20 April 2023 12:16 AM IST

வாடகை பாக்கி தொடர்பாக மெட்ராஸ் ரேஸ் கிளப் மேல்முறையீடு; அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு 1946-ம் ஆண்டு 160 ஏக்கர் 86 சென்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் 1970-ம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி முதல் வாடகை உயர்த்தப்பட்டது. அதன்படி, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கி இருந்தது. இதுகுறித்து அரசு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மெட்ராஸ் ரேஸ் கிளப் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'அரசுக்கு வாடகையை உயர்த்த அதிகாரம் உள்ளது. எனவே, வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும். தவறினால் மனுதாரரை போலீஸ் உதவியுடன் வெளியேற்றி நிலத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், இந்த வழக்குக்கு அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும். விசாரணையை ஜூன் 3-வது வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்