தர்மபுரி
ரூ.241 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்
|தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் ரூ.241 கோடி மதிப்பில் அடுக்கு மாடிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்று வீடு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கும் விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.
தர்மபுரி:
வீடு ஒதுக்கீடு ஆணைகள்
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணை மற்றும் புதிய வீடுகள் கட்ட பணி ஆணைகள் வழங்கும் விழா தர்மபுரி அதியமான் கோட்டத்தில் நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி கோழிமேக்கனூரில் ரூ.14 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் ஒரு மேல் தளத்துடன் அடுக்கு மாடியாக கட்டிமுடிக்கப்பட்ட 168 குடியிருப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். இதேபோல் தர்மபுரி நகராட்சி பகுதியில் தாமாக வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட 270 பேருக்கு மானியத்துடன் ரூ.5 கோடியே 67 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகளை வழங்கினார்.
7 இடங்களில்
அப்போது கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
தமிழக முதல்- அமைச்சர் உத்தரவுப்படி இந்த விழாவில் வீடுகள் ஒதுக்கீடு ஆணை மற்றும் தாமாக வீடு கட்டும் திட்டத்தில் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் பெற்றுள்ள பயனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து குடியிருப்போர் நலச்சங்கத்தினை உடனடியாக உருவாக்க வேண்டும். தங்களுக்கான வீடுகளை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரித்திட வேண்டும்.
புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை பெற்றுள்ள பயனாளிகளும் தங்கள் வீடுகளை உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் ரூ.241 கோடி மதிப்பில் அடுக்கு மாடிகள் கொண்ட 2,432 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், பாப்பிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன், இளநிலை பொறியாளர்கள் வேல்மோகன், சிலம்பரசன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.