< Back
மாநில செய்திகள்
தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது - வெங்கையா நாயுடு
மாநில செய்திகள்

தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது - வெங்கையா நாயுடு

தினத்தந்தி
|
8 Jan 2023 3:54 AM IST

தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

தாய்மொழி

கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தாய்மொழிதான் முக்கியம். அதன் பிறகு தான் மற்றவை. நான் பிறமொழிகளுக்கு எதிரானவன் அல்ல. ஒவ்வொருவருக்கும் தாய்மொழிதான் முதன்மையானது. ராஜ்யசபாவில் அவரவர் தாய் மொழியில்தான் பேச சொல்வேன். தமிழில் வணக்கம் என்பது பொதுவானது. தாய்மொழி, பாரம்பரிய உடை, கலாசாரம் ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமானது.

யோகா

ஆந்திராவில் இந்தி மொழியை திணிக்க வேண்டாம் என்றேன். ஆனால் டெல்லியில் இந்தி தேவை என உணர்ந்தேன். இதனால் நான் இந்தி படிக்க ஆரம்பித்தேன். தேவைப்படும் மொழியை நாம் கற்றுக்கொள்வது நல்லது.

இயற்கைக்கு எதிராக செயல்பட்டதால் சென்னை கடந்த காலங் களில் மழை பாதிப்புக்கு உள்ளானதை பார்த்தோம். நீர் நிலை, ஆறுகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் இயற்கைக் கான பங்களிப்பை கொடுக்க வேண்டும். யோகாவுக்கு மதங்கள் கிடையாது. பிரதமர் மோடி யோகாவை திணிக்கிறார் என்கிறார்கள். யோகா நமது உடலுக்கு வலுசேர்ப்பது.

உடல் ஆரோக்கியம்

துரித உணவுகள் உடலுக்கு ஏற்றதல்ல. ஆரோக்கியமான உண வை எடுத்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். டி.வி., செல்போன், இணையதளம் போன்றவை குழந்தைகளின் திறனை பாதிக்கிறது. சில சமயங்களில் மன ரீதியாக பாதித்து தற்கொலைக்கு கூட தூண்டுகிறது. ஆசிரியரை மறக்க கூடாது. 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதை்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, மொழியை திணிக்கவும் கூடாது. நாட்டை வலிமைப்படுத்த வேண்டும். லஞ்சத்துக்கு எதிராகவும், சாதிக்கு எதிராகவும் இளைஞர்கள் நிற்க வேண்டும் என்றாா்.

சர்ச்சைக்குரிய கேள்வி

இதையடுத்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது தொடர்பான நிருபர்கள் கேட்டனர். அதற்கு அரசியலமைப்பு சட்டப்படி சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது என்று வெங்கையா நாயுடு பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தொழில்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேலும் செய்திகள்