< Back
மாநில செய்திகள்
நெல்லை வழியாக இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் இன்று முதல் 31-ந்தேதி வரை ரத்து
மாநில செய்திகள்

நெல்லை வழியாக இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் இன்று முதல் 31-ந்தேதி வரை ரத்து

தினத்தந்தி
|
22 July 2024 4:32 AM IST

சென்னை செல்லும் பல்வேறு ரெயில்களும் புறப்படும் நேரம் மாற்றம், பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை,

நெல்லை வழியாக இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் இன்று (திங்கட்கிழமை) முதல் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. சென்னை செல்லும் பல்வேறு ரெயில்களும் புறப்படும் நேரம் மாற்றம், பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ரெயில்வே கோட்டத்தில் தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தும் பணிகள் நடக்க உள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்களில் சில முழுமையாக ரத்து செய்யப்பட்டும், பல ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டும், பல ரெயில்கள் தாமதமாக புறப்படுவது குறித்தும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதன்படி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் இரவு 11 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பகுதி ரத்து

தினமும் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து தாம்பரம் செல்லும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று, 24, 26, 27, 29, 31 ஆகிய தேதிகளில் விழுப்புரம் முதல் தாம்பரம் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 9 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 24, 25, 28, 30 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும்.

அதேபோல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் இரவு 7.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 24, 28, 29, 31 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில் இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை), 25, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்திற்கு பதிலாக சென்னை எழும்பூருக்கு சென்றடையும்.

இதேபோல் பல்வேறு ரெயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்