திருநெல்வேலி
''மக்கள் விரோத பா.ஜ.க. அரசை அகற்றஇந்தியா கூட்டணி ஒருமித்துள்ளது''- காதர் முகைதீன் பேட்டி
|‘‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை அகற்ற இந்தியா கூட்டணி ஒருமித்துள்ளது’’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் தெரிவித்தார்.
''மக்கள் விரோத பா.ஜ.க. அரசை அகற்ற இந்தியா கூட்டணி ஒருமித்துள்ளது'' என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் தெரிவித்தார்.
செயற்குழு கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் செயற்குழு கூட்டம், நெல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் தலைமை தாங்கி பேசினார்.
மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், துணை செயலாளர் இப்ராஹிம் மஜ்ஜீ, துணைத்தலைவர் கோதர் மைதீன், மாவட்ட தலைவர் மீரான் மைதீன், செயலாளர் பாட்டபத்து முகமதுஅலி, பொருளாளர் ஆதம் இலியாஸ், இளைஞர் அணி பொறுப்பாளர் நயினார் முகமது கடாபி, தென்காசி மாவட்ட பொருளாளர் மசூது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி ஒருமித்து...
டெல்லியில் வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டம் மற்றும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. 'இந்தியா' கூட்டணியில் உள்ள 28 கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள், கோட்பாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைவரும் பா.ஜனதா கொள்கையை ஏற்காத கூட்டணியாகவும், மக்கள் விரோத பா.ஜ.க. அரசை அகற்றுவதிலும் ஒருமித்துள்ளோம்.
பா.ஜனதா ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கொள்கை, ஒரே மதம், ஒரே தத்துவம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் 36 சதவீதம் பேர் மட்டுமே பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 64 சதவீத மக்கள் பா.ஜனதா கொள்கையை ஏற்கவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை. நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.