கள்ளக்குறிச்சி
போதை பொருட்கள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
|கள்ளக்குறிச்சியில் போதை பொருட்கள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் போதை பொருட்கள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வரவும், போதை பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைளுடன் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரில் மாற்றுத்திறனாளிகள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, நான்கு முனை சந்திப்பு, சேலம் மெயின்ரோடு உள்பட முக்கிய சாலை வழியாக சென்று மந்தவெளியில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், அரசு அலுவலர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.