திருவண்ணாமலை
போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சாராய தடுப்பு வேட்டை
|தானிப்பாடி அருகே மலை கிராமங்களில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சாராய தடுப்பு வேட்டை நடந்தது.
தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் ஒழிப்பது தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத்தொடர்ந்து இன்று தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.கார்த்திகேயன் தலைமையில் 50 காவலர்கள் கொண்ட 5 தனிப்படைகள் கள்நாத்தூர், புதூர் மலை, அரிசிக்கல்பாறை ஆகிய பகுதிகளில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
புதூர்செக்கடி கிராமத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், பொதுமக்களிடையே மதுவிலக்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், பெண்கள் தங்களின் கணவர் மற்றும் பிள்ளைகளை சாராயம் தொழிலில் ஈடுபடாமல் இருக்க செய்ய வேண்டும். குடும்ப பொருளாதாரம் முன்னேற்றம் அடைய பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்.
விவசாய தொழில் செய்ய ஊக்குவிக்கலாம். படித்த இளைஞர்களுக்கு மேல்படிப்பு தொடர தேவையான உதவிகளை வழங்க காவல் துறை சார்பாக தயாராக உள்ளோம் என்றார்.
மேலும் கள்ளச்சாராயம் ஒழிப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.முருகன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.யு.ரமேஷ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.