திண்டுக்கல்
திண்டுக்கல், பழனியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|திண்டுக்கல், கொடைக்கானல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திண்டுக்கல், கொடைக்கானல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
விழிப்புணர்வு ஊர்வலம்
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்ைதயொட்டி திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பஸ்நிலையம், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. இந்த ஊர்வலத்தின் போது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்தி சென்றனர். இதில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன், கலால் உதவி ஆணையர் விஜயா, கோட்ட கலால் அலுவலர்கள் நவநீதன், சுந்தரவேலன், முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள், போலீசார், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
பழனி, கொடைக்கானல்
பழனியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை, பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலம், திண்டுக்கல் சாலை, திருவள்ளுவர் சாலை, நகராட்சி சாலை, ஆர்.எப்.சாலை, மயில் ரவுண்டானா வழியே சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. இந்த ஊர்வலத்தில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின்போது போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
கொடைக்கானல் உட்கோட்ட போலீஸ் துறை, கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், கொடைக்கானலில் நடைபெற்றது. இதற்கு கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு மதுமதி தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் வரவேற்றார். இதில், நகராட்சி முன்னாள் தலைவரும், செஞ்சிலுவை சங்க கிளை தலைவருமான டாக்டர் குரியன் ஆபிரகாம், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலத்தில் கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் சாம் ஆபிரகாம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபாலாண்டி, செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தாவூது, சலாமத், கருணாநிதி, நகராட்சி கவுன்சிலர் இருதயராஜா மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி சேக், வேன் ஓட்டுனர் சங்க தலைவர் அந்தோணி, கொடைக்கானல் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள், சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம் ஏரிச்சாலை, நகராட்சி அலுவலகம், அண்ணா சாலை வழியாக சென்று மூஞ்சிக்கல் பகுதியில் நிறைவடைந்தது.
குஜிலியம்பாறை, வத்தலக்குண்டு
குஜிலியம்பாறையில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்ைத, வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, கம்பன் வித்யாலயா உயர்நிலைப்பள்ளி, தி.கூடலூர் விவேகம் வித்யாலயா உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை ஒழிப்பது குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று குஜிலியம்பாறை பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. இதில், குஜிலியம்பாறை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலாயுதம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார், பொன்ராஜ், பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் கதிரவன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் வத்தலக்குண்டுவில் நடைபெற்ற ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் ராஜா, வாணி, ராம்சேட், புதுவாழ்வு மைய இயக்குனர்கள் மேரி குளோரி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம் சந்தை, கடைவீதி, மாரியம்மன் கோவில், மெயின் ரோடு வழியாக சென்று வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.