நாமக்கல்
மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
|நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.85 ஆயிரத்து 900 பறிமுதல் செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாமக்கல்லில் உள்ள மோகனூர் சாலை காந்திநகர் கூட்டுறவு காலனி தெருவில் தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் (இயக்கமும், பராமரிப்பும்) இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் சேவைக்கு லஞ்சம் கேட்பதாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து இங்கு நேற்று மாலை 4 மணியளவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்த பீரோக்கள் மற்றும் டேபிள்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த செயற்பொறியாளர் நாகராஜன் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.85,900 பறிமுதல்
அதேபோல் மின்வாரிய அலுவலக அதிகாரிகளின் வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அலுவலகத்தின் முதல் மாடியில் கோப்புகள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.85 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திடீர் சோதனை, மின்வாரிய அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.