பெரம்பலூர்
பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
|பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்யப்பட்டது.
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி உள்ளிட்ட 7 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் அலுவலகத்தின் வாயில் கதவு உள்ளிட்ட அனைத்து கதவுகளையும், ஜன்னல் கதவுகளையும் உள்புறமாக பூட்டி தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள், ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். இரவு 10 மணி வரை அலுவலகத்தை விட்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெளியே வராததால் கணக்கில் வராத பணம் சிக்கியிருக்கலாம் என்றும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டதில் ரூ.60 ஆயிரம் சிக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.