அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...!
|அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் அலுவலகம், வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
அதிமுக முன்னாள் உணவு மற்றும் நுகர் பொருள்கள் துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரசு பதவி தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த விபரங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி திருச்சி கே.கே நகர் ஐயர் தோட்டம், 2வது மெயின் ரோடு 3வது கிராஸ் பகுதியில் உள்ள காமராஜின் நண்பர் பாண்டியன்(53) என்பவரது வீட்டில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான இஸ்பெக்டர்கள் உள்ளிட்ட ஆறு பேர் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலதிபரான இவர் பூதலூரில் அரிசி ஆலை, திருச்சி மாத்தூரில் இன்டஸ்ட்ரீஸ் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையிலும் சோதனை ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தில்லைநகர் பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டிலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.