மயிலாடுதுறை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
|மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் அருள்பிரியா தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை 4-45 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.
ரூ.84 ஆயிரம் பறிமுதல்
பின்னர் வாயில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அங்குள்ள கோப்புகளை நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவும், வெளியில் இருந்து உள்ளே வரவும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.84 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் தொடர்பாக அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனை இரவு வரை நீடித்தது.