கன்னியாகுமரி
விபத்தில் மேலும் ஒருவர் சாவு
|நாகர்கோவிலில் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து பீச்ரோடு செல்லும் சாலையில் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாகர்கோவில் இடலாக்குடி பறக்கை ரோடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஹிஷாம் அகமது (வயது 17) என்பவர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற அவருடைய நண்பரான கோட்டார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (17) என்பவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஆகாசுக்கு சொந்தமானதாகும். அந்த மோட்டார் சைக்கிளை ஹிஷாம் அகமது ஓட்டிச் சென்ற போது தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மேலும் ஒருவர் சாவு
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள், பஸ் மீது மோதுவதற்கு முன்பு சாலையோரமாக நடந்து சென்ற ஒருவரின் மீதும் மோதியது. இதில் அவரும் படுகாயம் அடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சுயநினைவு இன்றி சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் இறந்தார். முதலில் அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த பால்சுதாகர் (50) என்பது தெரியவந்தது. இதனால் விபத்தில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. ஆகாஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.