தஞ்சாவூர்
பாலத்தின் மற்றொரு பகுதி இடிந்து விழுந்தது
|பாலத்தின் மற்றொரு பகுதி இடிந்து விழுந்தது
கொள்ளிடம் ஆற்றின் நீர் ஆதாரத்தை கொண்டு கொள்ளிடம் - வேளாங்கண்ணி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் குடிநீர் சேகரிக்கும் கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய்களை தாங்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 18 தூண்கள் கொண்ட பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதால், ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி கூட்டுக்குடிநீர் குழாய் செல்லும் பாலத்தை தாங்கும் ஒரு தூணின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த தூணுடன் பாலமும் 50 அடி நீளத்துக்கு கடந்த 18-ந்தேதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்து குடிநீர் குழாய் மட்டும் ஆபத்தான நிலையில் தொங்கியது. இதையடுத்து 19-ந்தேதி இடிந்து விழுந்த அந்த தூண் மற்றும் பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. நேற்று மாலை இடிந்து விழுந்த பாலத்தின் அருகில் உள்ள மற்றொரு தூண்பகுதி திடீரென உள்வாங்கியது. இதில் அந்த பாலத்தின் மற்றொரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் குடிநீர் செல்லும் குழாய் துண்டிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் என்.முரளிதரன், நிர்வாக பொறியாளர் எஸ். கருணாகரன், உதவி நிர்வாக பொறியாளர் கே. முருகேசன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.