சென்னை
சிமெண்டு கலவை எந்திர லாரியில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடியவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு லாரி டிரைவர் பலி
|தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதால் சிமெண்டு கலவை எந்திர லாரியில் மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய டிரைவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு லாரி டிரைவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் இருந்து மணலி பெரியார் நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு சிமெண்டு கலவை எந்திர லாரியை ஓட்டிச்சென்றார்.
அப்போது தெருவில் தாழ்வாக தொங்கியபடி இருந்த மின்சார கம்பியில் லாரி உரசியது. இதனால் சிமெண்டு கலவை எந்திர லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. டிரைவர் சரத்குமார் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. அவர் அலறி துடித்தார்.
அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து சவுக்கு கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரியின் டிரைவரான சித்தூரை சேர்ந்த சுரேஷ் (44) என்பவர் தனது லாரியை விட்டு கீழே இறங்கி வந்து, மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சரத்குமாரை காப்பாற்ற முயன்றார். இதற்காக அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து சரத்குமார் மீது அடித்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த சிமெண்டு கலவை எந்திர லாரி மீது சுரேஷின் கால் உரசியது. இதில் அவரையும் மின்சாரம் தாக்கியதால் அவர் சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் மற்றும் சரத்குமார் இருவரையும் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சரத்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய லாரி டிரைவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு லாரி டிரைவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.