விருதுநகர்
ஆசிரியர் தம்பதியை கொன்று 3 மாதமாக சிக்காமல் இருந்த மற்றொரு தம்பதி
|அருப்புக்கோட்டையில் ஆசிரியர் தம்பதியை கொடூரமாக கொன்றுவிட்டு, 3 மாதமாக சிக்காமல் இருந்த மற்றொரு தம்பதி தற்போது போலீசிடம் சிக்கினர். துப்பு துலங்கியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
அருப்புகோட்டை,
அருப்புக்கோட்டையில் ஆசிரியர் தம்பதியை கொடூரமாக கொன்றுவிட்டு, 3 மாதமாக சிக்காமல் இருந்த மற்றொரு தம்பதி தற்போது போலீசிடம் சிக்கினர். துப்பு துலங்கியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
ஆசிரியர் தம்பதி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன். இவருடைய மனைவி ஜோதிமணி. இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். கடந்த ஜூலை 18-ந் தேதி அவர்களது வீட்டில் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். நகை, பணம் கொள்ளை போய் இருந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தனர். அப்போது ஜோதிபுரம் 5-வது தெருவில் வசித்து வந்த மில் தொழிலாளி சங்கர் (42) என்பவர், அப்பகுதியில் அடிக்கடி சைக்கிளில் சென்று வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சங்கரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
நகைக்காக கொலை
கொலை செய்யப்பட்ட சங்கரபாண்டியன் வீட்டிற்கு எதிரே சில மாதங்களுக்கு முன்பு சங்கர் தனது மனைவி பொன்மணியுடன் குடியேறி சில மாதங்கள் வசித்துள்ளார். சங்கரின் மனைவி பொன்மணி, சங்கரபாண்டியன்- ஜோதிமணி தம்பதியிடம் நன்கு பழகியுள்ளார். சங்கர் சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், கடனை அடைக்க தனது மனைவி மூலம் சங்கரபாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் சங்கரபாண்டியன் பணம் தர மறுத்ததால் சங்கர் ஆத்திரம் அடைந்தார்.
சங்கரபாண்டியன், ஜோதிமணியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க தனது மனைவி பொன்மணியுடன் இணைந்து திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சம்பவத்தன்று இரவு சங்கரபாண்டியன் வீட்டில் புகுந்த சங்கர், அதிகாலை வரை குளியல் அறையில் பதுங்கி இருந்துள்ளார்.
ஜோதிமணி அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட வந்த போது, வீட்டின் உள்ளே நுழைந்த சங்கர் தூங்கிக்கொண்டிருந்த சங்கரபாண்டியனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சங்கர பாண்டியனின் அலறல் கேட்டு ஜோதிமணி உள்ளே வந்தார். அப்போது கதவின் பின்னால் மறைந்து நின்றிருந்த சங்கர், ஜோதிமணியையும் கத்தியால் குத்திக்கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றிக்கொண்டு தனது மனைவி பொன்மணி உதவியுடன் தப்பியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
நகை பறிமுதல்
இதையடுத்து சங்கரையும், பொன்மணியையும் போலீசார் கைது செய்தனர். 10 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.