< Back
மாநில செய்திகள்
திருத்தணியில் கல்லூரி பஸ் மீது மற்றொரு பஸ் மோதி விபத்து - மாணவிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணியில் கல்லூரி பஸ் மீது மற்றொரு பஸ் மோதி விபத்து - மாணவிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தினத்தந்தி
|
25 Feb 2023 1:53 PM IST

திருத்தணியில் கல்லூரி பஸ் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு திருத்தணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து கல்லூரிக்கு சொந்தமான வேன் மற்றும் பஸ் மூலமாக மாணவிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அரக்கோணத்தில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி கல்லூரி பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள ஜெ.ஜெ. நகர் பகுதியில் மாணவி ஒருவரை ஏற்றி செல்ல கல்லூரி பஸ் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ் நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ் பின்னால் பலமாக மோதியது.

இந்த விபத்தில் கல்லூரி பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல் தனியார் பஸ்ஸில் வந்த 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீசார் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கல்லூரி பஸ் விபத்து ஏற்பட்டதை அறிந்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. விபத்தில் காயமடைந்த மாணவிகளை திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. ஹசரத்பேகம், தாசில்தார் வெண்ணிலா, துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், வருவாய் ஆய்வாளர் கமல் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார், விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்