திருச்சி
மேலும் 20 வாலிபர்களிடம் ரூ.44½ லட்சம் மோசடி
|மேலும் 20 வாலிபர்களிடம் ரூ.44½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
வெளிநாட்டு வேலை
திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் எம்.எஸ். கன்சல்டன்சி என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி (வயது 28), மேலாளர் பாலகிருஷ்ணன் (32) ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். இதுவரை சுமார் 250 பேரை போலந்து, ருமேனியா, செர்பியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தநிலையில் போலந்து மற்றும் ருமேனியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 8 பேரிடம் மொத்தம் ரூ.18 லட்சம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியதாக தெரிகிறது.
போலி பணி நியமன ஆணை
ஆனால் அந்த பணி நியமன ஆணை போலியானது என்பது தெரியவரவே, அதுபற்றி பாதிக்கப்பட்ட 8 பேரும் கடந்த 10-ந் தேதி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் ஆட்களை வேலைக்கு அனுப்பி வருவதும், இவர்களுக்கு சென்னை, மும்பை, மதுரை ஆகிய இடங்களில் சப்-ஏஜெண்டுகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இதுபோல் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று போலந்து மற்றும் ருமேனியா நாடுகளில் வேலைக்கான பணி நியமன ஆணையை போலியாக வழங்கி இருப்பது தெரியவந்தது.
மேலும் ரூ.44½ லட்சம்
குறிப்பாக வேலை கேட்டு வரும் நபர்களிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.3½ லட்சம் வரை பெற்றுள்ளனர். பின்னர், அந்த பணத்தை மலேசியாவில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கு அனுப்பி இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி, மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிறுவனம் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வெளிவரவே, அதை பார்த்து பாதிக்கப்பட்ட 20 வாலிபர்கள் நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்துள்ளனர். அவர்களிடம் மொத்தம் ரூ.44 லட்சத்து 45 ஆயிரம் பெற்று போலி பணி நியமன ஆணை வழங்கி மீனாட்சியும், பாலகிருஷ்ணனும் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த புகார்களின் பேரில் 2 பேர் மீதும் போலீசார் மீண்டும் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.