பெருமாள் சிலை மீது உட்கார்ந்த சாமியாருக்கு அபிஷேகம், தீபாராதனை
|கோசல்ராம் என்பவர் ஆதிகேசவ பெருமாள் கோவிலை கட்டி நிர்வகித்து வருகிறார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகலூரை சேர்ந்தவர் கோசல்ராம் (வயது 65). இவர் அந்த பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆதிகேசவ பெருமாள் கோவிலை கட்டி நிர்வகித்து வருகிறார். இந்த கோவிலில் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.
அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோசல்ராம் அருள்வாக்கு கூறி வந்தார். இவருடைய அருள்வாக்கு பலருக்கு பலித்து உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமானது. இதனால் அவர் அந்த பகுதியில் பிரபலமான சாமியார் ஆனார்.
இந்த நிலையில் கோவிலில் உள்ள பள்ளி கொண்ட பெருமாள் சிலை மீது கோசல்ராம் உட்கார்ந்து இருக்க, கோவிலின் பூசாரிகள் பால், புனிதநீர், இளநீர், தயிர், மஞ்சள், திருமஞ்சனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அவருக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் அவருக்கு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.