முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே செயல்படுத்தும் என அறிவிப்பு
|தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தொடக்கப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குதல், கல்வி இடைநிற்றலைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த சூழலில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டம், ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக சென்னை மேயர் பிரியா தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சென்னையில் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்குத் தனியாருக்கு ஒப்பந்தம் செய்து விடுவது தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இதன்மீது வாக்கெடுப்பு நடந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி காலை உணவு திட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரித்தன.
இந்த நிலையில், காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுக்கும் டெண்டர் அறிவிப்பு தற்போது கோரப்படவில்லை எனவும், மாநகராட்சி சார்பிலேயே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை மாநகராட்சியில், முதல் -அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் முன்னோடி திட்டமாக 37 பள்ளிகளில் மாநகராட்சியின் சார்பில் காலை உணவு தயாரித்து தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியலின்படி இதற்காக அமைக்கப்பட்ட உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது முதல் - அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதல் - அமைச்சரின் காலை உணவுத் திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.