< Back
மாநில செய்திகள்
அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
16 Sept 2023 3:00 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது.

கொடைக்கானல்

கொடைக்கானல் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக அ.தி.மு.க.வினர் அண்ணா சாலையில் உள்ள கே.சி.எஸ். திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் ஏழுரோடு சந்திப்பு, லாஸ்காட் ரோடு வழியாக பிரையண்ட் பூங்காவுக்கு வந்தனர். பின்னர் பூங்கா அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளரும், முன்னாள் நகராட்சி தலைவருமான ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சி தலைவர் வி.எஸ்.கோவிந்தன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, நகர அவைத்தலைவர் ஜான்தாமஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், மேல்மலை ஒன்றிய செயலாளர் பொன்னுத்துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.வினர் மரியாதை

இதேபோல் கொடைக்கானல் நகர தி.மு.க. சார்பில் கே.சி.எஸ். திடலில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக பிரையண்ட் பூங்காவை அடைந்தனர். பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் முகமது இப்ராகிம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஒன்றிய செயலாளர் கருமலைபாண்டி, ஒன்றியக்குழு தலைவர் சுவேதா, ராணிகணேசன், நகர அவைத்தலைவர் மரியஜெயந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நத்தம், தொப்பம்பட்டி

அ.தி.மு.க. சார்பில் நத்தம் பஸ்நிலையம் அருகில் நடந்த விழாவுக்கு மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், நத்தம் ஒன்றிய தலைவருமான ஆர்.வி.என். கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சின்னு, மணிகண்டன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அண்ணாவின் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழனி அருகே புளியம்பட்டி நால்ரோட்டில் தி.மு.க. சார்பில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கி, அண்ணா உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் புளியம்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் கதிர்வேல், தி.மு.க. கிளை செயலாளர் கண்ணுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் சுலோச்சனா சோமு, புளியம்பட்டி ஊராட்சி தலைவர் சந்திரா சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாணார்பட்டி

சாணார்பட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மேற்கு மாவட்ட பொருளாளரும், மாவட்ட கவுன்சிலருமான விஜயன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட துணை செயலாளர் சுந்தரராஜன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட கவுன்சிலர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அண்ணாவின் உருவபடத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

திண்டுக்கல் அருகே என்.ஜி.ஓ. காலனியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, அண்ணா உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் அழகு பொன்னையா, பரமேஸ்வரி பாண்டித்துரை, முன்னாள் ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கதிரேசன், டாஸ்மாக் தொ.மு.ச. மாவட்ட தலைவர் மாரிமுத்து, ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்