சென்னை
அண்ணாநகரில் ரவுடி வெட்டிக்கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்
|அண்ணாநகரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்தீப் (வயது 30). ரவுடியான இவர் மீது அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று உள்ளது. தற்போது ஆட்டோ ஓட்டி வந்தார்.
அண்ணா நகர், நடுவாங்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த சந்தீப், பின்னர் தனது நண்பர்களுடன் பேசிவிட்டு திரும்பினார். அப்போது அவரை வழி மறித்த 6 பேர் கொண்ட கும்பல் சந்தீப்பை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த சந்தீப், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த அண்ணாநகர் போலீசார் கொலையான சந்தீப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ேமலும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 2018-ம் ஆண்டு ஆதித்யா என்பவரை அண்ணா நகரில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து ஆட்டோ ஓட்டி வந்தார்.
நேற்று இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி விட்டு நடுவாங்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று சாப்பிட்டார். பினனர் தனது நண்பர்களுடன் பேசிவிட்டு வீட்டுக்கு திரும்பிச்செல்லும்போது படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
மேலும் நண்பர்களுடன் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் அங்கிருந்து கிளம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே ஆதித்யாவை கொலை செய்ததற்கு பழிக்குப்பழியாக சந்தீப் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்து நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் அண்ணா நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.