திருநெல்வேலி
எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அன்னமுத்திரி தர்ம பூஜை
|எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அன்னமுத்திரி தர்ம பூஜை நடைபெற்றது.
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சித்திரை 18-ம் பெருக்கு திருவிழா 29-ந்தேதி மாலை 5 மணிக்கு சித்தர் பீட பூர்ணா அபிஷேகத்துடன் தொடங்கியது. சித்திரை 18-ம் பெருக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு எட்டெழுத்து பெருமாள், பெரியபிராட்டி சிறப்பு திருக்காட்சியும், கருடசேவையும் நடந்தது. இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு எட்டெழுத்து பெருமாள் கோவிலில் இருந்து கருட சேவை மேளதாளம் முழங்க கோசாலைக்கு புறப்பட்டு வந்தது.
மதியம் 12 மணிக்கு கோசாலையில் உள்ள சக்திநாத படிகலிங்கம் முன்பு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எட்டெழுத்து பெருமாள் எழுந்தருளினார். அங்கு அன்னலிங்கபூஜை, அன்ன முத்திரை தர்ம பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து அன்னமுத்திரி அன்னதானம் நடந்தது. இரவு 9 மணிக்கு சிவசுப்பிரமணியர் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை 18-ம் பெருக்கு திருவிழாவையொட்டி நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் இருந்தும், சந்திப்பில் இருந்தும் எட்டெழுத்து பெருமாள் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.