அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சு முட்டாள்தனமானது - புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன்
|"அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சு முட்டாள்தனமானது என்று புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல் பேசி வருகிறார். அதிமுக கூட்டணி கட்சி என நினைக்காமல் கட்சியின் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்வதை புதுச்சேரி மாநில அதிமுக கண்டிக்கிறது. மலிவு விளம்பரத்துக்காக பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி அண்ணாமலை அவ்வப்போது விமர்சனம் செய்கிறார். அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சு முட்டாள்தனமானது.
தேசிய கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்படக் கூடிய தகுதி அண்ணாமலைக்கு இல்லை. அவர் மீது கட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார். அண்ணாமலை புதுவைக்கு வரும்போது அதிமுக பதிலடி தரும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
அதிமுகவுடன் கூட்டணி இல்லாவிட்டால் தென்னிந்தியாவிலேயே பாஜக என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும். தமிழகத்தில் அதிமுகவின் நிலைப்பாடு புதுவைக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.