அண்ணாமலையின் அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயல் - முத்தரசன் கண்டனம்
|திமுகவை தனிமைப்படுத்த பாஜக அவதூறு பிரச்சாரம் செய்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை திமுகழகத் தலைவர் உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது குற்றச்சாட்டு என்ற பெயரில் சொத்து விபரங்களை செய்தியாக வெளியிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி வரும் ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஒன்றிய அரசின் அதிகாரத்தில் இருந்து அகற்ற, எதிர்கட்சிகளை அணிதிரட்டி ஒருங்கிணைத்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், அவரது கட்சியினரையும் மிரட்டி நிர்பந்திக்கும் முயற்சியின் வெளிப்பாடாகும்.
ஜனநாயகத்தை பாதுகாக்க இந்திய அரசியல் சாசனம் ஏற்படுத்தியுள்ள அமைப்புகளான வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை ஆகியவற்றை ஏவி எதிர்கட்சித் தலைவர்கள் மீது சோதனைகளும், விசாரணைகளும் நடத்தி அவர்களை மோசமானவர்களாக மக்கள் முன் நிறுத்துவது ஆர்எஸ்எஸ், பாஜகவின் வழக்கமாகும். கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடந்த முஸ்லிம் இன அழிப்பு பேரழிவு தாக்குதலில் மோடி அரசின் கரம் இருப்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்திய பிபிசி நிறுவனத்தின் ஆவணப்படம் தடை செய்யப்பட்டதும், மோடியின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் அதானியின் குழும நிறுவனங்களின் பங்குச் சந்தை கணக்கியல் மோசடிகளுக்கு துணை போன குற்றச்சாட்டின் மீது கூட்டு நாடாளுமன்றக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி அன்றாடம் அமளி, துமளியாக்கி ஜனநாயக நடைமுறைகளை நிராகரித்ததும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி பறிக்கப்பட்டதையும் நாடு ஒருமுகமாக கண்டித்து வருகிறது.
பாஜக ஒன்றிய அரசின் மீது நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலிமை பெற்று வரும் நிலையில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து, சமூகநீதி ஜனநாயக கொள்கை அடிப்படையில் பரந்துபட்ட கூட்டணி அமைக்க திமுகழகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பாஜக ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியலமைப்பு நிறுவனங்களை கருவிகளாக்கி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள திமுகவை தனிமைப்படுத்த பாஜக அண்ணாமலை மூலம் அவதூறு பரப்பும் விஷமத்தனத்தில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தேர்தல் ஆதாயம் தேடு மலிலான செயலுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து தீவிரமாக களமிறங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.