அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ராமதாஸ்
|அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் அமர்த்தப்பட்டு, இன்று வரை தொகுப்பூதிய பணியாளர்களாகவே நீடிக்கும் 205 பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 13-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தியும் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காத நிலையில் முத்துலிங்கம் என்ற தொகுப்பூதிய பணியாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 205 ஊழியர்களின் நிலையும், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் 140 பேரின் நிலையும் கவலைக்குரியவை. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ரூ.1,500 ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு இப்போது ரூ.3,500 முதல் ரூ.7,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.
தினக்கூலி பணியாளர்களுக்கு அவர்கள் பணி செய்யும் நாட்களுக்கு மட்டும் தான் ஊதியம் வழங்கப்படும். வழக்கமாக தொகுப்பூதியத்தில் பணியில் சேரும் பணியாளர்களுக்கு இரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் வழங்கப்படும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றுக்கொண்டதால் அவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக பணி நிரந்தரம் மறுக்கப்பட்டு வருகிறது.
இவர்களது நியமனம் விதிகளின்படி நடந்துள்ளது. பணி நிரந்தரம் செய்வதற்கான தகுதியும், திறமையும் கொண்ட தொகுப்பூதியர்களையும், தினக்கூலி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பது நியாயமற்றது.
அவர்களின் கோரிக்கையை ஏற்று பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். விஷம் குடித்த முத்துலிங்கத்திற்கு தரமான மருத்துவம் வழங்கி அவரை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.