கடலூர்
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த முயற்சி
|பயிர்களை அழித்த என்.எல்.சி.யை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த முயன்றனர்.
அண்ணாமலைநகர்:
என்.எல்.சி. சுரங்கம்-2 விரிவாக்கத்திற்காக விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை ராட்சத எந்திரங்கள் மூலம் அழித்த என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்கக்கோரியும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் என்.எல்.சி.யை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கல்லூரி வளாகத்தில் ஒன்று திரண்டனர்.
அப்போது அங்கு வந்த அண்ணாமலை நகர் போலீசார் மற்றும் பொறியியல் புல முதல்வர் கார்த்திகேயன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முயற்சியை கைவிட்டு, மீண்டும் வகுப்புகளுக்கு சென்றனர்.