'பா.ஜ.க. தலைவர்களின் சாதனைகளை அண்ணாமலை பேச வேண்டும்' - ஆர்.பி.உதயகுமார்
|வாஜ்பாய், அத்வானி, சாவர்க்கர் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களின் சாதனைகளைப் பற்றி அண்ணாமலை பேச வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை அலங்காநல்லூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நினைத்தால் புகழ்வதும், நினைத்தால் இகழ்வதும் சிலருக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைகளை காப்பதற்கு கோடான கோடி தொண்டர்கள் இருக்கும்போது, அண்ணாமலையின் தேவையும், தயவும் அ.தி.மு.க.விற்கு எப்போதும் தேவையில்லை.
அண்ணாமலை வேண்டுமானால் அ.தி.மு.க.வின் உறுப்பினராக சேர்ந்து ஜெயலலிதாவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லட்டும். பா.ஜ.க.வின் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, சாவர்க்கர் போன்றவர்களின் சாதனைகளைப் பற்றி அண்ணாமலை பேச வேண்டும். அந்த கொள்கைகளை வைத்து மக்களை கவர வேண்டும்.
ஆனால் அதை விடுத்து, தாய் தமிழகத்திற்காக தன்னையே அர்ப்பணித்து, தன் வாழ்நாளெல்லாம் தமிழர்களுக்காக உழைத்து, இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிய ஜெயலலிதாவின் புகழைப் பற்றி அண்ணாமலை கூறுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் அவர் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது, பாராட்டுவதில் கூட அரசியல் நோக்கம் இருக்கும்போது, அதை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?"
இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.