< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை கவலைப்பட வேண்டாம்: ஆர்.பி உதயகுமார் தாக்கு
மாநில செய்திகள்

அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை கவலைப்பட வேண்டாம்: ஆர்.பி உதயகுமார் தாக்கு

தினத்தந்தி
|
6 July 2024 3:52 PM IST

அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் தேவையில்லை என ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை,

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாகரிகமில்லாத அரசியல் பண்பாட்டை தொடர்ந்து விதைத்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலைக்கு என்ன திடீர் அக்கறை. அ.தி.மு.க.வை பற்றி எங்களை போன்ற தொண்டர்களுக்கு இல்லாத கவலை அண்ணாமலைக்கு ஏன் வருகிறது. அண்ணாமலை அ.தி.மு.க. தொண்டரா, பா.ஜனதா தொண்டரா? ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழ தேவையில்லை. அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் தேவையில்லை.

பாராளுமன்ற தேர்தலில் கோவையில் கோடிக்காணக்கான பணத்தை வாரி இரைத்தும் அண்ணாமலையை மக்கள் நிராகரித்து விட்டார்கள். வாரணாசியில் 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களில் பெற்ற வாக்கை விட குறைவான வாக்குகளையே இம்முறை பிரதமர் மோடி பெற்றுள்ளார். அண்ணாமலை போன்ற தகுதி இல்லாத, அரைவேக்காடு தனமான, பேராசை கொண்ட நபர்களால் தான் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சி தயவில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று பேசிய அண்ணாமலை அந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும். இனியும் அ.தி. மு.க. தொண்டர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம். பா.ஜ.க. என்ற தன்கட்சியை அண்ணாமலை வளர்த்துக்கொள்ளட்டும். அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை கவலைபட வேண்டாம் . அ.தி.மு.க.வை இனி விமர்சித்தால் அண்ணாமலையை எதிர்த்து போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்.அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என்று தெரியாது."

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்