மக்கள் கோபமாக இருப்பதால் இந்தியை வைத்து தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது - அண்ணாமலை
|மக்கள் கோபமாக இருப்பதால் இந்தியை வைத்து தி.மு.க. கபட நாடகம் ஆடுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலைக்கு வரவேற்பு
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 30-ந் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு 12 நாள் பயணத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியின்போது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் இந்தி என்ற விசயத்தை கையில் எடுப்பார்கள். இது புதிதல்ல. சமீபத்தில் தி.மு.க. கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேசியதை கேட்டோம். தமிழகத்தில் பா.ஜ.க. இல்லவே இல்லை என 5 ஆண்டுகளுக்கு முன் சொன்ன மு.க.ஸ்டாலின், தற்போது பா.ஜ.க.வை முதல் எதிரி என அறைகூவல் விட்டு உள்ளார். தமிழக மக்கள் மனதிலும். மண்ணிலும் பா.ஜ.க. வளர்ந்து கொண்டு இருக்கிறது.
பா.ஜ.க. மீது பயம்
பா.ஜ.க.வை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இதை பார்க்கும்போது முதல்-அமைச்சருக்கு பா.ஜ.க. மீது பயம் ஏற்பட்டு உள்ளது. சொந்த கட்சியினர் ஏதாவது செய்வார்களோ என்ற பயம். இந்த பயங்கள் அவருக்கு தூக்கத்தை கெடுத்து உள்ளது. இந்தியை வைத்து மறுபடியும் மொழிப்போர் என கூறுகின்றனர். இந்தியை இந்தியாவில் காங்கிரஸ் திணித்த போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தனர். இந்தியை தொடர்ந்து திணித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து உள்ளனர்.
ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்த போது இந்தி கமிட்டி தலைவராக இருந்தார். அதேபோல் அமீத்ஷா உள்துறை மந்திரியாக இருப்பதால் கமிட்டி தலைவராக உள்ளார்.
கபட நாடகம்
மத்திய பல்கலைக்கழகத்தில் இந்தியை மட்டும் கட்டாயமாக மத்திய அரசு வைத்து உள்ளதாக தி.மு.க. அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ஐ.ஐ.எம்., சிவில் சர்வீஸ் படித்து உள்ளேன். எந்த தேர்வு நடந்தாலும் 8-வது அட்டவணைபடி தான் நடக்கும். இல்லாத ஒன்றை குழப்பி ஆளும் தி.மு.க. கட்சி மீது மக்களுக்கு இருக்கின்ற கோபம் காரணமாக இந்தியை வைத்து தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது.
தி.மு.க. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். பொய் பித்தலாட்டம் செய்வதை விட்டு மக்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை சரி செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்
பிரதமருக்கு தமிழக தலைவர்களின் குரு பூஜைக்கு வர வேண்டும் என ஆசை. பிரதமர் 30-ந் தேதி தமிழகம் வருவதாக செய்தி எதுவும் இல்லை. 2023-ம் ஆண்டு குருபூஜைக்கு பிரதமர் வர வேண்டும் என கோரிக்கை வைக்கும்.
முக்கியமான விசயங்களை விட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதில் தி.மு.க.வுக்கு கைவந்த கலை. நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி விட்டது. பா.ஜ.க.வுக்கு இடம் தர மக்கள் தயாராக உள்ளனர். 2024-ல் பா.ஜ.க.விற்கு மக்கள் மன்றத்தில் உள்ள வரவேற்பை பார்ப்பீர்கள்.
தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சரை தூங்க விடுங்கள். தூக்கம் மிக முக்கியம். பா.ஜ.க. கட்சி வளரும் போது முதல்-அமைச்சருக்கு தூக்கம் கெடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்தார்.
கமலாலயத்திலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டன.