அண்ணாமலை பாதயாத்திரை - தேமுதிகவுக்கு அழைப்பு...!
|தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் நாளை மறுநாள் பாதயாத்திரையை தொடங்குகிறார் . 110 நாட்கள் பாதயாத்திரை நடத்த உள்ளார். தொடக்க நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும், நிறைவு விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கின்றனர்.
பாதயாத்திரை தொடக்க நிகழ்வுக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நேற்று முன்தினம் தாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.