ஆவினை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
|தமிழக அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி வருகிறது, ஆனால் மத்திய அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என கூறியுள்ளார்.
நாகர்கோவில்,
அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழக அரசு அறிவித்தபடி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தகுதியான பெண்களுக்கு கிடைத்துள்ளது. இதில் யாரேனும் விடுபட்டு இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பை அரசு வழங்கி உள்ளது. இந்த உதவித்தொகையானது கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உந்துதலாக அமையும்.
தமிழகத்தில் தனியார் நெய் ஒரு கிலோ 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஆனால் ஆவினில் அதிகபட்சமாக விலையை உயர்த்திய பிறகும் கூட 700 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதை விலை உயர்வு என்று கூறினால் என்ன செய்வது? பால் கொள்முதலுக்கு விவசாயிகள் பாதிக்கப்படாத அளவுக்கு பணம் கொடுக்க வேண்டும்.
ஆனால் தனியாருக்கு சாதகமாக ஆவின் நெய் விலை உயர்த்தி இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அப்படி எனில் விவசாயிகளுக்கு விலை கொடுக்க வேண்டாமா? தனியார் நெய் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று அவருக்கு தெரியுமா? எனவே இதைப்பற்றி பேசும் உரிமை அவருக்கு கிடையாது.
தமிழக அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி வருகிறது. ஆனால் மத்திய அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்த்தி உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது மிகப்பெரிய கேள்வியாக பா.ஜனதா முன் வைக்கப்படுகிறது. இதற்கு முதலில் அவர்கள் பதில் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.