< Back
மாநில செய்திகள்
தி.மு.க.வின் புது கொள்ளைக் கூட்டாளி அண்ணாமலை - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தி.மு.க.வின் புது கொள்ளைக் கூட்டாளி அண்ணாமலை - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

தினத்தந்தி
|
26 Aug 2024 7:23 PM IST

2026 தேர்தலில் அ.தி.மு.க.வின் தகுதியை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது மனம்போன போக்கில் பிதற்றித் திரியும் அண்ணாமலை பா.ஜ.க. தலைவரானவுடன், கட்சிக்கு செலவு வைக்கமாட்டேன் என்றும், தனது செலவுகளை தானே பார்த்துக்கொள்வேன் என்றும் வீர வசனம் பேசினார். மாதந்தோறும் தனது குடும்ப செலவுகளையும், வீட்டு வாடகையையும், காருக்கான பெட்ரோலையும், தனது உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கான சம்பளத்தையும் நண்பர்கள் தருவதாக அண்ணாமலை கூறினார். எந்தவித பிரதிபலனும் பாராமல் இந்த மகானுபாவரை போஷிக்கக்கூடிய நண்பர்களின் பெயர்களை பட்டியலிடத் தயாரா?

தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் ரெட் ஜெயன்ட், ஜி ஸ்கொயர் நிறுவனங்கள் மீது நடந்த சோதனைகள், மணல் கடத்தல் விசாரணை, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் பிடிபட்ட பணம், திருவண்ணாமாலையில் ஆளுங்கட்சியினரின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் பற்றிய விசாரணைகள் திடீரென்று பாதியில் நின்ற மர்மம் என்ன? அண்ணாமலை ரிலீஸ் செய்த தி.மு.க. பைல்ஸ் என்னவாயிற்று?

தி.மு.க. அரசின் அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் பெயரில், அவர் பேசியதாக வெளியிட்ட ஆடியோவும், கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடி ரூபாயை என்ன செய்வது என்று தெரியாமல் முதல்-அமைச்சரின் மகனும், மருமகனும் தவிப்பதாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு என்னவாயிற்று ? இதுபோல் பல விசாரணைகள் தற்போது சைலன்ட் மோடுக்கு மாறியதன் மர்மம் என்ன? ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது மெட்ரோ ரெயில் திட்ட ஒப்பந்ததாரர்களிடமிருந்து பல கோடி ரூபாய் கையூட்டுப் பெற்றதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு என்னவாயிற்று?

2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது, பா.ஜ.க. ஒட்டுக்கு காசு கொடுக்காது என்று மேடைக்கு மேடை முழங்கிய அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்தலின்போது செலவிட்ட பணத்திற்கும், சென்னை காவல்துறையிடம் பிடிபட்ட ரூ. 4 கோடி வழக்கிற்கும் தற்போது அண்ணாமலை என்ன விளக்கம் கூறுவார்? 2019-ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது பிரதமர் மோடி, எங்கள் கழகப் பொதுச் செயலாளரை மனுத் தாக்கல் செய்ய அழைத்ததாகவும், எடப்பாடி பழனிசாமி மறுத்ததாகவும், இதனால் மானமுள்ள அண்ணாமலை கூட்டணிக் கட்சித் தலைவராக எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யைக் கூறியுள்ளார்.

2019-ல் இந்த நாலாந்தரப் பேர்வழி எங்கிருந்தார்? இவர் அரசியலுக்கு எப்போது வந்தார்? இவர் பாரதிய ஜனதா கட்சியில் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் இணைந்தார். மேலும், 2021 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் பரப்புரையின் போது, எங்கள் கழகப் பொதுச் செயலாளரின் பின்னே கைகூப்பி நின்றதும், அரவக்குறிச்சி தொகுதியில் பிரதமர் மோடியின் பெயரை சுவர் விளம்பரங்களில் அழித்ததும், சமூக ஊடகங்களில் இன்றளவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 2022-ம் ஆண்டு அண்ணாமலை ஒரு கூட்டத்தில் பேசும்போது;

"அண்ணன் எடப்பாடி பழனிசாமியை நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன். ஒன்று அரசியல்வாதியாக, இன்னொன்று காவல் துறையில் நான் ஒரு பொறுப்பிலே இருந்து, ஒரு முதல்-அமைச்சராக ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று பல அதிகாரிகள் கனவு காண்பார்கள். அவருடைய ஆட்சி உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், என்னைப் பொறுத்தவரை ஒரு பொற்கால ஆட்சி என்றுதான் நான் சொல்வேன். இப்போது தமிழக மக்கள் எங்கே சென்றாலும் கூட இந்த வார்த்தை அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை. அந்த ஆட்சி இன்று இல்லையே! அப்படிப்பட்ட ஒரு மனிதர் முதல்-அமைச்சராக இல்லையே! அப்படிப்பட்ட மாமனிதர் அவருக்கு அருகிலே அமர்ந்திருப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு பெருமை; எனக்கும் பெருமை என்று கருதுகிறேன்" என்று கூறியிருந்தார்.

இதுபோல் அண்ணாமலை பேசிய பல உண்மைகள் ஒளி நாடா வடிவில் இன்றும் சமூக ஊடகங்களில் உலா வருவதை நேரமிருந்தால் அண்ணாமலை பார்த்து கேட்க வலியுறுத்துகிறேன். அண்ணாமலை அருகிலேயே இருந்த திருச்சி சூர்யா, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது மணல் மாபியாக்களிடம் இருந்து ரூ. 200 கோடியை வாங்கியபோது உடனிருந்ததாகவும், எனக்கு மட்டும் கொடுத்தால் பத்தாது, மத்திய இணை அமைச்சராக உள்ள முருகனுக்கும் கொடுங்கள் என்று சொல்லி ரூ. 100 கோடி கொடுத்ததையும் நான் அறிவேன் என்று பொதுவெளியில் சூர்யா சமூக ஊடகங்களில் கூறியுள்ளார். சூர்யாவின் குற்றச்சாட்டுகள் உள்நோக்கத்துடன் இருந்திருந்தால் அண்ணாமலை ஏன் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை?

எங்கள் கழகப் பொதுச் செயலாளரைப் பற்றி கடந்த சில ஆண்டுகளாக தி.மு.க.வினர் கக்கி வந்த விஷத்தை, அவர்களின் புது கொள்ளைக் கூட்டாளி அண்ணாமலை மீண்டும் வாயில் போட்டு விழுங்கி வாந்தி எடுத்திருக்கிறார். 2026 தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நான்காவது இடம்கூட கிடைக்காது என்று அண்ணாமலை சாபமிடுகிறார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் இந்த இயக்கம் வேறு ஒருவர் கைக்குப் போய்விடும் என்று ஆரூடம் சொன்ன அதிமேதாவிதான் இந்த அண்ணாமலை.

2026-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகுதியை மக்கள் தீர்மானிப்பார்கள். இந்தக் கபட வேடதாரியின் பொய்க்கால் ஆட்டத்திற்கும் மக்கள் முடிவு கட்டுவார்கள். "வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்" என்ற குறளின் பொருள் உணர்ந்து அரசியலில் களமாடுபவர் எங்கள் ஒப்பற்ற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அண்ணாமலையின் பருப்பு இந்த தண்ணீரில் வேகாது என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்