துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு அண்ணாமலை வாழ்த்து
|துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார். அவர் 252.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளவேனிலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், "ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எப் (ISSF) உலகக் கோப்பையில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 2-வது தங்கம் வென்ற நம்முடைய நட்சத்திர வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கடலூரைச் சேர்ந்த இவர், தனது அற்புதமான செயல்திறனால் ஒவ்வொரு தமிழனையும், அனைத்து பாரதிய மக்களையும் பெருமைப்படுத்தியுள்ளார். தலை வணங்குகிறேன்!" என்று தெரிவித்து உள்ளார்.