< Back
மாநில செய்திகள்
பாதயாத்திரையை விமர்சித்த முதல் அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்
மாநில செய்திகள்

பாதயாத்திரையை விமர்சித்த முதல் அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்

தினத்தந்தி
|
29 July 2023 6:09 PM IST

அண்ணாமலை மேற்கொள்ளும் பாதயாத்திரையை பாவயாத்திரை என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்திவருகிறார். இந்த யாத்திரையை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ராமேசுவரத்தில் தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை மேற்கொள்ளும் பாதயாத்திரையை பாவயாத்திரை என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். முதல் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது;

"புனித பூமியான ராமேசுவரத்தில் நேற்று மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்ட "என் மண் என் மக்கள்" யாத்திரை தொடங்கிய அன்றே தமிழக முதல்வரை கோபமடைய செய்துள்ளது. பாவம் இதை பற்றி புலம்ப தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையை "பாவயாத்திரை" என்றும் அழைத்துள்ளார்

தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும் முதல் குடும்பத்தின் செல்வத்தை பெருக்குவதிலும் ஊழல் நிறைந்த திமுக அரசு இன்றும் கவனம் செலுத்துகிறது.

தமிழ் நாட்டில் எவரேனும் நீரில் மூழ்கி செய்த பாவங்களை போக்க வேண்டும் என்றால், அது திமுகவின் முதல் குடும்பமாகத்தான் இருக்க வேண்டும். அவ்வளவு பாவங்கள் செய்துள்ளனர்.

திமுக மற்றும் காங்கிரஸால் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவால், இன்றும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது.

மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றை பார்த்து வாய்மூடி பார்வையாளர்களாகவே இருந்தனர். இலாகா பேச்சுவார்த்தைகள், சம்பாரிக்க கூடிய துறைகள் போன்ற விஷயங்களே மீனவர்களின் வாழ்க்கையை விட முக்கியமானதாக இருந்தது.

2009 இல், இலங்கையில் 1.5 லட்சம் தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டனர், அப்போது தமிழ்நாடு முதல்வர் அவர்களும் அவரது தந்தையும் அவர்களுக்கு உதவுவது போல் நடித்து கொண்டிருந்தனர்.

உங்கள் கணக்கில் பல பாவங்கள் உள்ளதால், எங்களுடைய பணிவான கோரிக்கை என்னவென்றால், இதற்கு பரிகாரம் செய்ய நீங்கள் தான் ராமேசுவரத்துக்கு பாவ யாத்திரை வர வேண்டும். நீங்கள் உங்கள் குடும்ப வளர்ச்சிக்காக தமிழ் மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு அங்கே நீரில் மூழ்கி சிவ பெருமானிடம் மன்னிப்பு கோரி பரிகாரம் செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்