< Back
மாநில செய்திகள்
கருத்து சுதந்திரத்தை பறிக்கும் திமுக அரசு - கிஷோர் கே.சாமி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்
மாநில செய்திகள்

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் திமுக அரசு - கிஷோர் கே.சாமி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

தினத்தந்தி
|
21 Nov 2022 3:51 PM IST

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமியை புதுச்சேரியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை,

மழை பாதிப்பு இடங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த கிஷோர் கே. சாமி, அவதூறு கருத்து பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைதேடி வந்தனர்.

இதனிடையே அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்த போலீசார், 4-வது வழக்கில் கிஷோர் கே.சாமியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தற்போது அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கிஷோர் கே.சாமி கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

கிஷோர் கே.சாமி கைதை தமிழ்நாடு பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த அரசு, தமிழக பாஜக பெண் தலைவர்களை இழிவாக பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்?

கிஷோர் கே.சாமி தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழ்நாடு பாஜக செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்