ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
|கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
சென்னை,
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன்படி கோவில்களில் சிவலிங்கத்திற்கு அரிசி சாதம், காய்கறிகள், பழங்கள் கொண்டு அலங்காரங்களும், அபிஷேகங்களும் நடைபெற்றன.
அந்த வகையில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதே போல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 50 கிலோ அரிசி, காய்கறிகள், பழங்கள் கொண்டு சிவலிங்கத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டது. கிரிவல பாதை லிங்கத்திற்கு 150 கிலோ அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ரூபாய் நோட்டுக்களால் உற்சவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. 108 லிங்கங்களுக்கு பக்தர்கள் அன்னாபிஷேகம் செய்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.