கரூர்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
|சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது
ஐப்பசி மாத பவுர்ணமி
சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி மாத பவுர்ணமி ஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளி ஆற்றலை நாம் பரிபூரணமாக பெறுவதற்காக ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவன் கோவில்களில் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து நன்கு துடைத்து விட்டு இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும்.
அன்னாபிேஷகம்
இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தை கலைத்து அதில் சிறிதளவு சாதத்தை எடுத்துக்கொண்டு போய் குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் உள்ள மீன்கள் மற்றும் ஜீவராசிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது .இதனால் அந்த ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் கல்யாண பசுபதீஸ்வரர், நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சாமிகளுக்கு அன்னம் சாத்தி, அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி கோவில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
கோடீஸ்வரர் கோவில்
இதேபோல் கரூர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள பாலாம்பிகை உடனாகிய கோடீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோடீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோடீஸ்வரர் சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நொய்யல்
தவிட்டுப்பாளையம் அருகே மேகபாலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து இக்கோவிலில் சுமார் ஒரு மூட்டை அளவிலான அரிசி மூலம் சாதம் தயார் செய்யப்பட்டது. முன்னதாக பாகவல்லி அம்பிகை, மேகபாலீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை மேகபாலீஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதமாக அன்னம் வழங்கப்பட்டது.
இதேபோல் புன்னம் புன்னைவன நாதர் கோவில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரன் கோவிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தோட்டக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற சொக்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானத்தால் சிறப்பு அலாங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டன.
இதேபோல், காகிதபுரம் காசிவிஸ்வநாதர், நன்னீயூர் சிந்தாமணி சிவாம்பிகை ஈஸ்வரன் கோவில், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் கோவிலும் சிறப்பு அன்னாபிஷேகம் நடந்தது.
இதேபோல் கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து ெகாண்டு சாமி தாிசனம் ெசய்தனா்.